புதுடெல்லி: மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2020ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அவர், டெல்லி காவல்துறை தனிப்பிரிவின் முன் ஆஜராகி இருந்தார். ஆனால் அந்த வழக்கிற்காக அவர் கைது செய்யப்படவில்லை. ஏனென்றால், அந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் பெற்றிருந்தார். எனினும் விசாரணையின் முடிவில் அவர் நேற்று மாலை 7 மணி அளவில் கைதாகினர். எந்த வழக்கில் கைதாகினார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், டெல்லி போலீஸார் விளக்கம் கொடுத்துள்ளனர்.
2018 ட்வீட் மூலம் மத உணர்வுகளை புண்படுத்திய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்துமத கடவுள்களை அவமதிக்கும் வகையில் படங்கள் பதிவிட்டததாக ட்விட்டர் நிறுவனம் ஜுபைர் குறித்து டெல்லி போலீஸை டேக் செய்து தகவல் தெரிவிக்க, அதை புகாராக எடுத்துக்கொண்டு அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மதத்தை அவமதிப்பதன் மூலம் எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. நம்பிக்கைகள்) வழக்குகள் பதிந்துள்ளது.
உடனடியாக அவரை கைதும் செய்துள்ளது. டெல்லி உளவுத்துறை டிசிபி கேபிஎஸ் மல்ஹோத்ரா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், “ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளை வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கத்துடன் முகமது ஜுபைர் ஒரு சந்தேகத்திற்குரிய படத்தை ட்வீட் செய்ததாக ட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து புகாரைப் பெற்ற பின்னரே அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். உளவுத்துறை மற்றும் ஐஎப்எஸ்ஓ சிறப்பு பிரிவு சார்பில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அவர் ஜுபைர் பதிவிட்ட ட்வீட்களை பாதுகாக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட உள்ளதாகவும் டிசிபி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.