இன்றும்கூட தொலைக்காட்சிகளில் ‘சூர்யவம்சம்’ படம் ஓடினால்போதும் மற்ற முக்கிய வேலைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, வாவ் என படத்தை கண் இமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அத்தோடு மட்டுமில்லாமல் ஐ எம் வாட்சிங் சூர்யவம்சம் என சோசியல் மீடியாக்களில் கெத்தாக ஸ்டேடஸ் போடும் அளவிற்கு படத்திற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ‘சூர்யவம்சம்’ வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. ஆம் சூர்யவம்சம் இதேநாளில் திரையரங்குகளில் வெளியானது.
சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், பிரியா ராமன் என பலர் நடித்து வெளியான இப்படத்தை இயக்கியவர் விக்ரமன்.. படத்துல எல்லா கேரக்டரையும் செமையாக செதுக்கியிருப்பார் விக்ரமன்… ஆனாலும் நாம இங்க பார்க்கப்போறது நந்தினியாக நடித்த இல்ல… இல்லல.. வாழ்ந்த தேவயானியைத்தான்.. ஏன் இந்த கேரக்டரை இன்றளவும் பலரும் ரசிக்கிறாங்க.. கொண்டாடுறாங்க..
சொகுசாக காரில் இருந்துகொண்டு ‘ஏய் வாத்து’என சொல்லும்போதே தனது படித்த, பணக்கார திமிரை தெனாவட்டாக காட்டியிருப்பார் நந்தினி.. ஆனால் அதே நந்தினிதான் ஒருகட்டத்தில் சின்னராசுவிடம் காதலில் விழுவார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையிட்டோ அல்லது வசதியான வீட்டு பிள்ளை என்றோ நந்தினிக்கு சின்ராசு மீது விருப்பம் வராது. ஊரிலேயே பெரிய குடும்பம்தான் சக்திவேல் கவுண்டரையுடைது. ஆனாலும் அப்பாவுக்கு என்னவோ அவர் உதவாக்கர பிள்ளைதான். சின்ராசு வீட்டிலும் மற்றவர்கள் எல்லோம் படித்து பெரிய பதவிகள் வசிக்க படிக்காத ஊதாரியாகவே காட்சியளிப்பார் சின்ராசு.. இப்படிப்பட்ட சின்ராசுவை நந்தினிக்கு பிடிக்க ஒரு காரணம் இருந்தது. அதுதாங்க சின்ராசு மனசு.. தான் காதலிச்ச பொண்ணு தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காம துஷ்பிரயோகம் செய்தபோதும், காதலியை வார்த்தைகளால் காயப்படுத்தாம ‘பிடிக்கலனு தெரிஞ்சதும் விலகிப்போன ஆண்மையும், நமக்கு கிடைக்கலனாலும்கூட காதலி நல்லா இருக்கணும்னு நினைச்ச அந்த சராசரி ஆண்களின் குணமும்தான் சின்ராசு மீது நந்தினிக்கு காதலை உண்டாக்கியது.
நல்ல படிச்ச பொண்ணு நந்தினி.. ஐஏஎஸ் ஆகணும்னு கனவும்வேறு.. ஆனால் தேர்வு செய்த மாப்பிள்ளையோ படிக்காத உதவாக்கர.. அதனால் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு..ஒரு கட்டத்தில் காதலுக்காக துணிச்சலாக பெற்றோரை எதிர்த்து கெத்தாக காதலனை கரம்பிடிக்கும் நந்தினி உண்மையிலேயே சபாஷ் சொல்ல வைத்திருப்பார்.
வசதியாக வாழ்ந்த பெண், தான் விரும்பிய ஆணை தேர்ந்தெடுத்ததாலேயே இப்போது வாடகை வீடுவரை வந்தாச்சு.. கணவனுக்கும் கூலி வேலை.. அனைத்தும் தெரிந்ததும் நந்தினியோ நொந்துபோகவில்லை. திருமணத்தை முறித்தும் ஓடிபோகவில்லை. ‘நமக்கு காசு பணம் வேணா இல்லாம இருக்கலாம். ஆனால் திறமை இருக்குன்னு’ கணவனுக்கு நம்பிக்கை பூஸ்ட் கொடுத்து தோளுக்கு தோள் நிற்பார்.
விருப்பப்பட்ட திருமண வாழ்க்கை கிடைச்சாலும், ஆனால் ஆசைப்பட்ட ஐஏஎஸ் கனவு இன்னும் கனவாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில்தான், கணவரின் முன்னாள் காதலியான கௌரியால் சிறுமைப்படுத்தப்படுகிறார் நந்தினி. அதைப் பாக்குற கணவர் சின்ராசு நொந்துபோகிறார். திருமணத்திற்கு பிறகு நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காம போய்றக் கூடாதுன்னு மீண்டும் படிக்க வைக்கிறார் கணவர். நந்தினியும் ஆசைப்பட்ட ஐஏஎஸ் ஆகுறாங்க.. ‘உதவாக்கரயை நம்பி வந்த நீ ஒரு உதவாக்கர’ என எந்த மாமா உதாசீனதப்படுத்துனாங்களே அந்த மாமாவே கோரிக்கை மனுவோட கலெக்டர் ஆபீஸ் வரும்போது, அடக்கமும், அதிகாரமும் கொண்ட பெண்ணாக மிளிர்வாங்க நந்தினி.
பணத்தையும், படிப்பையும் பார்த்து சின்ராசுவ உதாசீனப்படுத்திட்டுபோன கௌரியே மீண்டும் தன் கணவனுக்காக வேலைகேட்டு சின்ராசுகிட்ட வரும்போது கௌரியை பார்த்து நந்தினி பேசுற ‘வாழ்க்கை எவ்வளவு வேகமா சுத்துது பார்த்தீங்களா’என பேசுற டயலாக் பக்கா மாஸ்..
பொதுவாகவே சமீப காலமாக வருகிற ஒரு சில படங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்கள் இருப்பதில்லை என்ற ஒரு புகார் உண்டு. ஆனால் சூர்யவம்சத்தில் நந்தினி கேரக்டரை பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார் விக்ரமன். அதாவது ஒரு பெண் தான் விரும்பியதை முழு அதிகாரத்துடன் செய்துமுடிப்பது, திருமணத்திற்கு பிறகான படிப்பு, பணத்தை விட குணம் முக்கியம் என நந்தினி கேரக்டர் அத்தனை வலுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இன்னும் பல பெண்கள் நந்தினி மாதிரி வாழ ஆசைப்படுவதுண்டு.. அப்படிப்பட்ட கேரக்டரை உருவாக்கிய இயக்குநர் விக்ரமனுக்கு வாழ்த்துகள்..