இந்திய ராணுவத்துக்கு புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்’ எனும் திட்டத்தைக் மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. 4 ஆண்டுக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடத்தப்படும் இந்தத் திட்டத்தில், பணியமர்த்தப்படும் அக்னி வீரர்களில் 25 சதவிகித வீரர்கள் மட்டுமே நேரடியாக ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர் உள்ளிட்ட விதிகளுடன் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டம் நாடு தழுவிய வன்முறையாக மாறியதை யாரும் மறந்துவிடமுடியது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய முதல்வர் பகவந்த் மான், “அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தின் அடிப்படை அமைப்பையே அழித்துவிடும். அக்னிபத் திட்டத்துக்கு எதிராக விரைவில் பஞ்சாப் சட்டப்பேரவையில் விரைவில் அனைத்துக் கட்சி தீர்மானம் நிறைவேற்றப்படும்.
அக்னி வீரர்களை பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் பாதுகாவலர்களாக வைத்திருப்போம் என்று பா.ஜ.க உறுப்பினர் கைலாஷ் விஜயவர்கியா கூறியது மிகவும் வெட்கக்கேடானது. இந்த திட்டம் பஞ்சாபியர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எதிரானது. இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தர்க்கமற்ற நடவடிக்கை இது. மத்திய அரசின் இந்த முட்டாள்தனமான நடவடிக்கையை மாநில அரசு வன்மையாக எதிர்க்கிறது ” என்றார்.