அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

சென்னை: ராணுவ ஆள்சேர்ப்புக்கான ‘அக்னிபாதை’ திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருத்தாசலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டு சேவைக்கான ‘அக்னி பாதை’திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘‘வலிமையும், வீரமும் மிகுந்த பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டது இந்தியராணுவம். அதன் வலிமையை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உலகமே உணர்ந்திருக்கிறது.

அத்தகைய பெயர் பெற்ற ராணுவத்தில், 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஆள்சேர்ப்பு திட்டத்தை பாஜகவினர் கொண்டு வருகிறார்கள். இப்படி உருவாவது ஆர்எஸ்எஸ் ராணுவமாக பிற்காலத்தில் மாறும். அவர்களுக்கு மக்களின் வரிப் பணத்தில் பயிற்சிஅளிக்கும் மோடி அரசின் திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.

திருச்சியில் சு.திருநாவுக்கரசர் எம்.பி., மயிலாடுதுறையில் எம்எல்ஏ ராஜகுமார், அறந்தாங்கியில் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரியில் ஜென்மராக்கினி மாதா கோயில் அருகே நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவல்லிக்கேணி தபால் நிலையம், ஆயிரம் விளக்கு, ஐசிஎப், திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூர், திருவண்ணாமலை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.