மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் 28-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என ஷிண்டே ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் உத்தவ் தாக்கரேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் உத்தவ் தாக்கரேவுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நில மோசடி வழக்கில் 28-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறையின் மும்பை பிரிவு சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ரூ.1,034 கோடி மதிப்பிலான நிலம் கைமாறியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராவத்துக்கு சொந்தமான சில சொத்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறும்போது, “அமலாக்கத் துறை எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. நல்லது. மகாராஷ்டிராவில் மிகப் பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து பாலாசாஹிப்பின் தொண்டர்களான நாங்கள் போராடி வருகிறோம். இது என்னை முடக்குவதற்கான சதி. என் தலையை வெட்டினாலும் அச்சப்படமாட்டேன். இதிலிருந்து தப்பிக்க குவாஹாட்டி வழியைப் பின்பற்ற மாட்டேன். என்னை கைது செய்யலாம்” என்றார்.
ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது.