கொரியா மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கையின் வதிவிடப் பணிப்பாளர் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 27ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது.
தற்போது கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்து கொரியவில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கைத் தொழிலாளர்களை விரைவாக கொரியாவுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு 250 பேரை கொரியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் லீ அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும், தரவுத்தளத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்த கோரிக்கைக்கு அமைய
தரவுத்தளத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது குறித்து அடுத்த வாரம் பரிசீலிக்கப்படும் என்றும் பணிப்பாளர் லீ மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த 10 வருடங்களில் கொரியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டி இலங்கைக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
கொரியாவில் பணிபுரிந்து நாடு திரும்பி, மீண்டும் கொரிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருப்பவர்களுக்கான விசேட கொரிய மொழிப் பரீட்சையை துரிதமாக நடாத்துவது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளதுடன், கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இலங்கை வதிவிடப் பொறுப்பாளரும் இதற்கு சாதகமாக பதிலளித்துள்ளார்.