நெட்ஃப்ளிக்ஸ். மணி ஹைஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற உலகத் தர வெப் சீரிஸ்களை அள்ளித் தெளித்த நிறுவனம் கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டுதான் இணையத்தில் தன் ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கியது.
பத்தே ஆண்டுகளில், 10 கோடி பேரை பணம் செலுத்த வைத்து வாடிக்கையாளராக மாற்றி இருந்தார் அதன் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ். அடுத்த நான்கு ஆண்டுகளில் (2021-ல்) இன்னும் 10 கோடி பேரிடம் காசு வாங்கி தன் வாடிக்கையாளராக மாற்றினார் அந்த மந்திரவாதி. தற்போது ஒட்டுமொத்தமாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 22.1 கோடியாக இருக்கிறது.
எல்லாமே பெருக்கல் வாய்ப்பாடில் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தபோது, 2022ஆம் ஆண்டில் ஜனவரி – மார்ச் வரையான மூன்று மாத காலத்தில், நெட்ஃப்ளிக்ஸில் இரண்டு லட்சம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவு இது என செய்திகள் வெளியாயின. அதோடு அடுத்த ஏப்ரல் – ஜூன் மாத காலத்தில், மேலும் 20 லட்சம் சந்தாதாரர்கள் வரை வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டது. இதுபோக ரஷ்யாவில் தன் ஸ்ட்ரீமிங் சேவையை வேறு நிறுத்திக் கொண்டது.
விளைவு… முதலீட்டாளர்கள் நெட்ஃப்ளிக்ஸ் பங்குகளை கூவிக் கூவி விற்கத் தொடங்கினர். அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன பங்குகள், கடந்த அக்டோபர் 2021-ல் வாழ்நாள் உச்சமாக சுமார் 700 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. 2022 ஜூன் 24ஆம் தேதி வர்த்தக நேர முடிவில் சுமார் 191 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸின் பங்கு தற்போது தன் பழைய உச்சவிலையில் இருந்து கிட்டத்தட்ட 72 சதவீதம் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு கூட நெட்ஃப்ளிக்ஸில் இருந்து பல நூறு பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஓடிடி தாதாவுக்கே ஏன் இந்த நிலை..? இதிலிருந்து நெட்ஃப்ளிக்ஸால் மீள முடியுமா?
இதையும் படிங்க… அமெரிக்கா: 3 வயது மகனை கொலை செய்து ஐஸ் பெட்டியில் வைத்திருந்த தாய் கைது
சப்ஸ்கிரைபரே துணை:
ஆப்பிள் நிறுவனத்தின் லயன்ஸ் கேட், அமேசானின் பிரைம், டிஸ்கவரி பிளஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ்… போன்ற நிறுவனங்களுக்கு ஓடிடி மட்டுமே வருவாய் ஈட்டும் தொழில் அல்ல. ஆனால் நெட்ஃப்ளிக்ஸுக்கு இது மட்டும்தான் தொழில். அதேபோல, சந்தாதாரர்களின் கட்டணத்தைத் தவிர நெட்ஃப்ளிக்ஸுக்கு பெரிய வருமானம் கொடுக்கும் வழிகள் ஏதும் இல்லை. எனவே சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறைவது நேரடியாக நெட்ஃப்ளிக்சின் வியாபாரத்தை கடுமையாக பாதிக்கும்.
ரிப்பிள் விளைவு:
நெட்ஃப்ளிக்ஸ் தன்னை உயிர்ப்போடும், ஓடிடி தளத்தில் ராஜாவாகத் தொடர ஸ்குவிட் கேம், ஸ்ட்ரேன்ஜர் திங்ஸ் போன்ற சீரிஸ்களை எடுக்க விரும்புகிறது. ஆனால் அதற்கு கோடிக் கணக்கில் பணம் தேவை. ஆப்பிள், அமேசான், டிஸ்கவரி, டிஸ்னி, சோனி போன்ற நிறுவனங்களிடம் தேவைப்படும் நேரத்தில் தங்களின் ஓடிடி தளத்தில் முதலீடு செய்ய போதிய பணம் இருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸிடம் பிரமாண்ட சீரிஸ்களை எடுக்க போதுமான முதலீட்டுப் பணம் இல்லை அல்லது ஒரு சீரிஸை நம்பி தன் பெரும்பகுதியிலான பணத்தை முதலீடு செய்ய முடியவில்லை. அது மேலும் நெட்ஃப்ளிக்ஸின் வியாபாரத்தை கடுமையாக பாதிக்கிறது. சமீபத்தில் மேகன் மார்கலை வைத்து நெட்ஃப்ளிக்ஸ் எடுப்பதாக இருந்த சீரிஸ் கைவிடப்பட்டதே, இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
இது போக, வில்லியம் அக்மேன் என்கிற அமெரிக்க முதலீட்டாளர் ஒருவர், நெட்ஃப்ளிக்ஸில் முதலீடு செய்யவிருப்பதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் சமீபத்தில் திடீரென முதலீடு செய்யப் போவதில்லை என்று அவர் கூறியது, அமெரிக்க ஊடகச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிராந்திய நிறுவனங்களின் ஆதிக்கம்
வெறுமனே படங்களையும், ஆவணப் படங்களையும், வெப் சீரிஸ்களையும் வாங்கி ஸ்ட்ரீம் செய்வது வேலைக்கு ஆகாதென்று தான் நெட்ஃப்ளிக்ஸ் தன்னுடைய ஒரிஜினல்ஸ்களை களமிறக்கியது.
ஆனால் இன்று எல்லா ஓடிடி தளங்களும் தங்கள் பங்குக்கு ஒரிஜினல்ஸ்களை களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. அதோடு பிராந்திய ரீதியிலான ஓடிடி தளங்கள் தங்களுக்குள்ளேயே படத்தை விற்பனை செய்து கொள்வது மற்றும் வெப் சீரிஸ்களை தயாரிப்பதென களமிறங்கத் தொடங்கியுள்ளனர். சன் நெக்ஸ்ட், மனோரமா மேக்ஸ், ஆஹா, ஆல்ட் பாலாஜி… போன்ற சில ஓடிடி தளங்களை உதாரணமாகக் கூறலாம்.
பணவீக்கம் – பொருளாதாரம்
கொரோனா பெருந்தொற்று, தொழிற்துறையின் அணுகுமுறை மாற்றம் போன்ற பல்வேறு காரனங்களால் நடுத்தர மக்களின் சம்பளம் குறைந்து கொண்டே வருகிறது, விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, ஒரு நடுத்தர குடும்பம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை (உதாரணத்துக்கு 500 ரூபாய்) செலவழித்தால் வீட்டில் கேபிள் அல்லது டிஷ் வைத்து பிடித்த சேனலைப் பார்க்கலாம்.
இப்போது பல ஓடிடி தளங்கள் வந்து கொண்டிருக்கும்போது, நடுத்தர குடும்பங்கள் பொழுது போக்குக்காக செலவழித்த அந்த குறிப்பிட்ட தொகை பெரிதாக மாறவில்லை அல்லது செலவழிக்கும் தொகையை அதிகரிக்க முடியவில்லை. அதே 500 ரூபாயை மட்டுமே செலவழிக்க விரும்புகின்றனர். அந்த 500 ரூபாய்க்குத் தான் ஆப்பிள் தொடங்கி ஆஹா வரை அனைத்து ஒடிடி தளங்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓடிடி தளங்களிலேயே ஆண்டுக்கு அதிக கட்டணத்தை வசூலிப்பது நெட்ஃப்ளிக்ஸ்தான் என்பதால், நடுத்தர மக்கள் நெட்ஃப்ளிக்ஸை கழட்டி விடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். சமீபத்தில் கூட பிரிட்டனில் சுமார் 15 லட்சம் பேர், பணத்தை மிச்சப்படுத்த ஓடிடி தளங்களுக்கு செலுத்தும் கட்டணங்களை நிறுத்தியுள்ளதாக கன்டர் என்கிற சந்தை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளதாக பிபிசியில் செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ஒரு கருத்துக் கணிப்பை இந்தியாவில் எடுத்திருந்தால் கூட, இதே போன்ற பதிலை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
விளம்பரம் – காசில்லிங்கைய்யா
ஓடிடி தளங்களிலேயே, விளம்பரம் செய்யப்படாத வெகு சில தளங்களில் நெட்ஃப்ளிக்ஸும் ஒன்று. ஆனால் இப்போதைய சூழலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, நெட்ஃப்ளிக்ஸ் விளம்பரங்களுடன் கூடிய சில நிகழ்ச்சிகளை வெளியிட இருப்பதாக சில செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இது நெட்ஃப்ளிக்ஸியன்களை கோபமடையச் செய்யலாம்.
பணி அழுத்தம்
நெட்ஃப்ளிக்ஸைப் பொருத்தவரை, உலகில் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழி, இன மதத்தவராக இருந்தாலும் அவர்களுக்கான பொழுதுபோக்கு படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைத் தயாரிக்க விரும்புகிறது நெட்ஃப்ளிக்ஸ். அதில் கடந்த சில ஆண்டுகள் வரை வெற்றியும் கண்டது. ஆனால் தற்போது அதே நெட்ஃப்ளிக்ஸால், பல திட்டங்களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் அதை வெற்றிகரமாக ஒருங்கே தயாரிக்க முடியாத நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது.
அதே போல ‘தி ஆஃபீஸ்’ , ‘ஃப்ரண்ட்ஸ்’ போன்ற மிகப் பிரபலமான சீரிஸ்களை நெட்ஃப்ளிக்ஸ் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், பின்ச் (Binge) பார்வையாளர்களை இழந்துள்ளது.
இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து, புதிதாக வரவிருக்கும் போட்டியாளர்களைத் தாண்டி, நெஃட்ப்ளிக்ஸ் தன்னை ஒரு பெரிய போட்டியாளராக நிரூபிக்க வேண்டும். சாத்தியமா…? நெட்ஃப்ளிக்ஸ் தலைவர்கள் தான் இக்கேள்விக்கு விடை கூற வேண்டும்.
– கெளதம்