ராமநாதபுரம்: “அதிமுகவே ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை. இப்போது அக்கட்சி யார் தலைமையில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது. மக்கள் மீது அக்கறை இருக்குமானால், அதிமுகவில் இந்த போட்டி வந்திருக்கக்கூடாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “ஆளுங்கட்சியாக இருந்ததிலிருந்து தூக்கியெறியப்பட்ட பிறகு, அதிமுகவில் அதிகாரப் போட்டியில் ஆளுக்கு ஆள் நிற்கின்றனர். அதிமுகவை பலப்படுத்தக்கூட இது பயன்படாது.
அதிமுகவே ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை இப்போது அக்கட்சி யார் தலைமையில் இருந்து என்ன பிரயோஜனம் வரப்போகிறது. மக்கள் மீது அக்கறை இருக்குமானால், அதிமுகவில் இந்த போட்டி வந்திருக்கக்கூடாது.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாதை திட்டத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பாராளுமன்ற ஜனநாயகம் பழிவாங்கப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. மகராஷ்டிராவில் இருக்கும் எம்எல்ஏக்களை கடத்திக் கொண்டுபோய், அசாமில் வைத்து கூத்தடிக்கின்றனர், அதைப்பற்றியும் கவலைப்படவில்லை. இந்தியாவில் ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் ரயில் தமிழகத்தில் ஓட ஆரம்பித்துவிட்டது. மதுரையிலிருந்து சென்னைக்கும், கோவையிலிருந்து சீரடிக்கும் தனியார் ரயில் இயக்கப்படுகிறது. இதைப் பற்றியெல்லாம் அதிமுக கவலைப்படவில்லை” என்று அவர் கூறினார்.