கிரெமென்சுக்: உக்ரைனில் ஷாப்பிங் மால் ஒன்றில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
உக்ரைனில் ரஷ்யா மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பு, பொருளாதாரத் தடைகள் என அனைத்தையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் திங்கள்கிழமையன்று பரப்பரப்பான இயங்கிக் கொண்டிருந்த ஷாப்பிங் மால் மீது ரஷ்ய படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின்போது 1000-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த மாலில் இருந்தனர்.
உக்ரைனின் மீட்புக் குழுவினர் தரப்பில் கூறும்போது, “இந்தத் தாக்குதலில் சுமார் 16 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண் ஒருவர் அளித்த பேட்டியில் , “என் கணவருடன் எலெக்ட்ரானிக் கடைகளில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோதுதான் இந்த பயங்கரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
அப்போது, என் தலையில் ஏதோ தாக்கிய உணர்வு. கட்டிட சுவர்கள் சிதறியதில் என் உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. அந்த இடமே ஒட்டுமொத்தமாக நாசமாகிவிட்டது. எப்படியோ முதல் மாடியை அடைந்துவிட்டேன். நான் சுயநினைவில்தான் இருந்தேனா அல்லது சுயநினைவின்றி இருந்தேனா என்பதே தெரியவில்லை. அது ஒரு நரகம் போல் இருந்தது”
இது குறித்து உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “இது தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தத் தாக்குதலை ரஷ்யா திட்டமிட்டே நடத்தியுள்ளது. அந்த மாலில் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்” என்றார்.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக கண்டித்துள்ளன. எனினும், இத்தாக்குதல் குறித்து ரஷ்யா தரப்பில் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
லுனின் பகுதி ஆளுநர் கூறும்போது, ”நான்கு மாதங்களுக்கும் மேலான போரில் இப்பகுதிக்கு இது மோசமான நாளாகும். எங்கள் எதிரிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.