சான் அன்டோனியோ:அமெரிக்காவில் சட்ட விரோதமாக ‘டிரெய்லர்’ வாகனம் வாயிலாக நுழைய முயன்ற 46 பேர் வெப்பம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோ புறநகரில் ஒரு டிரெய்லர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அவ்வழியே சென்ற ஒருவர் டிரெய்லரில் இருந்து உதவி கோரி முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு டிரெய்லர் கதவு திறக்கப்பட்டது. உள்ளே 46 பேர் இறந்து கிடந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மயங்கிய நிலையில் கிடந்த 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.டிரெய்லர் லாரியில் குளிர்சாதன வசதி இருந்தும் அது வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடுமையான வெப்பம் தாங்காமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் இறந்துள்ளனர். சிலர் குடிநீரின்றி உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக சான் ஆன்டோனியோவுக்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.மெக்சிகோ கவுதமாலா ஹோண்டுராஸ் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயற்சிக்கின்றனர்.
இதனால் எல்லையோர மாகாணங்களில் அமெரிக்கா கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இருந்தும் டிரெய்லர் லாரிகள் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் குளிர்சாதன வாகனங்கள் ஆகியவற்றில் மறைந்து அமெரிக்காவில் நுழைய முயற்சிக்கின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் மூச்சுத் திணறல் மற்றும் தாங்க முடியாத வெப்பத்தில் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
Advertisement