சன் டிவியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நெடுந்தொடர் ரோஜா. இந்தத் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சிபு சூர்யன். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்தத் தொடரின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று ரோஜா – அர்ஜூன் சார் காம்போ! புதுமுகமாக இந்தத் தொடரில் அறிமுகமானாலும் பிரியங்கா – சிபு காம்போ பலருக்கும் ஃபேவரைட்! பிரியங்காவும் இந்தத் தொடரின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் இந்தத் தொடரின் நாயகன் சிபு சூர்யன் திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், “நான் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டுமே ரோஜா தொடரில் நடிப்பேன். என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்புதலுடன் வேறொரு புதிய புராஜெக்ட்டில் நடிக்க இருக்கிறேன். `குட்பை’ சொல்வது அவ்வளவு சுலபமானது அல்ல. அர்ஜூன் கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று!
நீங்கள் கொடுத்த அன்பிற்கு என் இதயம் கனிந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய அன்பில்லாமல் இன்று என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது! வேறொரு புராஜெக்ட்டின் மூலமாகத் தொடர்ந்து உங்களை என்டர்டெயின் செய்வேன். தொடர்ந்து உங்களுடைய அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்!’ என குறிப்பிட்டிருக்கிறார்.
‘அர்ஜுன் சார் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம்!’ என சிபு சூர்யனின் ரசிகர்கள் அந்தப் பதிவின் கீழ் கமென்ட் செய்து வருகிறார்கள்!