கொழும்பு-இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை, அமெரிக்க உயர்மட்டக் குழு சந்தித்துப் பேசியது
.நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அவசியப் பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்துஉள்ளது. இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்து பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க, அமெரிக்க உயர் மட்டக் குழு ஒன்று நான்கு நாள் பயணமாக கொழும்பு வந்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை துணை அமைச்சர் கெல்லி கெய்டர்லிங், கருவூலத் துறை துணை அமைச்சர் ராபர்ட் கப்ரோத், இலங்கைக்கான துாதர் ஜூலை சங் ஆகியோர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினர்.
இது குறித்து அமெரிக்க துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:சவாலான இத்தருணத்தில், அமெரிக்கா இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்யும். நீண்ட கால அடிப்படையில், இலங்கையின் வளமான, பாதுகாப்பான, எதிர்கால ஜனநாயகத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, எரிபொருள் தட்டுப் பாட்டை சமாளிக்கும் வகையில் அடுத்த மாதம் 10ம் தேதி வரை, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என, இலங்கை அரசு அறிவித்துள்ளது.
Advertisement