உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம்… சட்ட யுத்தத்தை முடுக்கி விட்ட ஓ.பி.எஸ்!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் திங்கள் கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னிச்சையாக பொதுக்குழுவை கூட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஒ.பி.எஸ் தரப்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி கடந்த 22- ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு, ‘‘அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால் மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்களை மட்டுமே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதுகுறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’’ என உத்தரவிட்டனர்.

இருப்பினும் கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானமும் நிராகரிக்கப்பட்டதால் கூட்டத்தின் பாதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

இந்த நிலையில் சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி ஒ.பன்னீா்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூன்:27) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஒ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞா் கெளதம் சிவ்சங்கா் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், ‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் 23 தீர்மானங்களை நிறைவேற்றக் கூறியும் அதனை கூட்டத்தில் செயல்படுத்தாமல் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும். அதனால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால், எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதாகவும், பன்னீர் செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிப்பதாகவும் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு (எடப்பாடி பழனிசாமி)  அதிகாரம் இல்லை என்று மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில், ஓ.பன்னீர் செல்வம் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பியுள்ள 9 பக்க புகார் கடிதத்தில், அதிமுகவில் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளரான தானும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஒப்புதல் அளிக்காமல் எந்த கூட்டமும் நடத்தப்படக் கூடாது.  கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்போது பொருளாளர் என்ற முறையில் தாம் கட்சியின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தாம் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஓ.பி.எஸ் புகார் கடிதத்தில் கூறியிருந்தார்.

ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க, அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இப்படி ஓரு சூழலில், தன்னிச்சையாக பொதுக்குழுவை கூட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஒ.பி.எஸ் தரப்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ், இன்று 2வது நாளாக ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

அதேநேரம், ஓ.பி.எஸ். எடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிச்சாமியும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.