ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே எட்டு மணி நேரமாக உயிருக்கு போராடிய இலங்கை தம்பதியை, இந்திய கடலோர காவல் படை, ‘மரைன்’ போலீசார் மீட்டனர்.
இலங்கை, மன்னாரைச் சேர்ந்த சிவன், 82; மனைவி ராஜேஸ்வரி, 70, இருவரும் நேற்று முன்தினம் இரவு, படகில் புறப்பட்டு அதிகாலை, 4:00 மணிக்கு தனுஷ்கோடி வந்தனர்.அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள், கரையில் இறக்கி விடாமல், 5 அடி ஆழ கடலில் தள்ளி விட்டு தப்பினர்.இருளில், கரை தெரியாமல் கடலில் தவித்த இருவரும், ஒருவழியாக அதிகாலை, 5:00 மணிக்கு கோதண்டராமர் கோவில் வடக்கு கரையில் ஏறினர்.
இதில், உடல், மனரீதியாக தளர்ந்த இருவரும் உயிருக்கு போராடினர். இந்த இடத்திற்கு வாகனங்களில் செல்ல முடியாது என்பதால், மண்டபம் மரைன் எஸ்.ஐ., காளிதாஸ் மற்றும் போலீசார் 2 கி.மீ., நடந்து சென்று, காலை, 6:00 மணிக்கு அந்த மூத்த தம்பதிக்கு ஜூஸ், குடிநீர் வழங்கி முதலுதவி செய்தனர்.காலை, 10:45 மணிக்கு இந்திய கடலோர காவல் படையின் ‘ஹோவர்கிராப்ட்’ கப்பலில் வந்த வீரர்கள், இருவரையும் கப்பலில் ஏற்றி, தரை வழியாக தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து வந்தனர். பின், ஆம்புலன்ஸ் மூலம் தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.உயிருக்கு போராடிய அகதி தம்பதிக்கு, முதலுதவி செய்ததுடன் வெயிலில் இருந்து பாதுகாக்க, 4 மணி நேரம் சேலையால் நிழல் அமைத்துக் கொடுத்த எஸ்.ஐ., காளிதாஸ், மரைன் போலீசாரை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
Advertisement