“இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி கூட்டுக் களவாணித்தனம் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்..?” என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்பு, ‘ஊழலை ஒழிக்க வந்த உலக மகா உத்தமர் போல’ மேடைக்கு மேடை பேசியதெல்லாம் முதலமைச்சர் திரு.ஸ்டாலினுக்கு மறந்து போய்விட்டதா..?
ஊழல் செய்த அத்தனை பேரையும் தனி நீதிமன்றம் அமைத்து தண்டிக்கப் போவதாக வாய்ச்சவடால் விட்டவர்கள், விசாரணைக்கு அனுமதிக்கவே இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்..?
பழனிசாமி கம்பெனியோடு முன்பு போட்டுக் கொண்டதாக சொல்லப்பட்ட 60:40 ஒப்பந்தம், நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா..?
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி கூட்டுக் களவாணித்தனம் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்..?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.