எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
கையிருப்பில் உள்ள நிதியில் எரிபொருளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஊடாக நிதி வழங்குவதுடன் கடன் கடிதங்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் எரிபொருளை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட தாய் நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் எதிர்வரும் மாதங்களுக்கு கடுமையான திட்டமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.