மும்பை: எஸ்பி குரூப் என்று அழைக்கப்படும் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவருமான பெரும் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார். அவருக்கு வயது 93.
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இன்ஜினியரிங், கட்டுமானம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், தண்ணீர், எரிபொருள், நிதிசேவை ஆகிய பல்துறைகளில் கால்பதித்து பெரும் நிறுவனமாக இயங்கி வருகிறது.
1865ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் மும்பையில் சாதாரண கட்டுமான நிறுவனமாக பணியை தொடங்கியது. தற்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 50,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் பெரும் தொழில் நிறுவனமாக உள்ளது. மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கட்டிடம், மும்பையில் உள்ள ஓபராய் ஹோட்டல், ஓமன் சுல்தானுக்கான நீலம் மற்றும் தங்கம் கொண்ட அல் ஆலம் அரண்மனை ஆகியவை இந்த நிறுவனம் கட்டிய பிரபல கட்டிடங்களாகும்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, மிஸ்திரி கிட்டத்தட்ட 29 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்துள்ளார். இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அவர் இடம் பெற்றுள்ளார்.
ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தில் பலோன்ஜி மிஸ்திரி நேரடி நிர்வாகப் பணிகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பபே விலகி விட்டார். தற்போது இக்குழுமத்தை பலோன்ஜி மிஸ்திரி வாரிசுகளான சைரஸ் மிஸ்திரி உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.
ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவராக இருந்த பலோன்ஜி மிஸ்திரி இந்த நிறுவனத்தை பெரும் சாம்ராஜ்யமாக வளர்த்தெடுத்தார். எனினும் பலோன்ஜி நிறுவனத்தின் செல்வம் என்பது டாடா சன்ஸ் நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளே.
தொழில் மூலம் குடும்ப உறவு
பலோன்ஜி குடும்பம் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதன் மூலம் டாடா சன்ஸ் நிர்வாகத்தில் அதிகப்படியான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. ஆனால் இதற்கு அடித்தளமிட்டது குடும்ப உறவு.
டாடா குடும்பத்தினர் அனைவருமே பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல பலோன்ஜியும் அவரின் முன்னோரும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இரு பார்சி குடும்பத்துக்கு இடையேயான உறவு 70 ஆண்டுகளுக்கு மேலானது. ஷபூர்ஜி பலோன்ஜி குரூப் பலோன்ஜியின் தந்தையால் உருவாக்கப்பட்டது.
1924-ம் ஆண்டில் டாடா குழும நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது இப்போதைய பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் ஒரு காலத்தில் பெரும் பணக்காரராக விளங்கிய பிரம்சோஸ் எடுல்ஜி தின்ஷா 2 கோடி ரூபாயை கடன் கொடுத்தார். இவரும் பார்சி சமூகத்தை சேர்ந்தவர். இந்தக் கடனுக்கு ஈடாக 12.5% டாடா சன்ஸ் பங்குகளை தின்ஷா குடும்பம் பெற்றிருக்கிறது.
பின்னர் மும்பையில் ரியல்எஸ்டேட் தொழில் செய்த பலோன்ஜி குடும்பத்தினருக்கு உறவினர் என்ற வகையில் தின்ஷா குடும்பத்தினர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 12.5% பங்குகளை விற்பனை செய்து விட்டனர். இதுமட்டுமின்றி டாடா குடும்பத்துடன் திருமண உறவின் மூலமும் பலோன்ஜி குடும்பத்துக்கு பங்குகள் வந்துள்ளன.
பலோன்ஜியின் மகள் நோயல் டாடாவைத் திருமணம் செய்துகொண்டார். அதன் மூலம் அவர்களது பங்கை வெளிநபருக்கு விற்க விரும்பாமல் பலோன்ஜி வாங்கியுள்ளார். இதன் மூலம் பலோன்ஜி மிஸ்திரி டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிலும் இருந்துவந்தார்.
2006-ம் ஆண்டு அவர் டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து விலகியவுடன் அவருக்கு பதில் அவரது மகன் சைரஸ் மிஸ்திரி, டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இணைந்தார். டாடா குழுமத்தில் பல பொறுப்புகளைக் கையாண்ட சைரஸ் மிஸ்திரி 2011-ம் ஆண்டு துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
சைரஸ் மிஸ்திரி 2012-ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், நான்கே ஆண்டுகளில் டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.37% பங்குகள் எஸ்பி குரூப் வசம் உள்ளன.
பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.