அபுதாபி,
ஜி-7 நாடுகள் உச்சி மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜெர்மனியின் ஜனாதிபதி ஓலாப் ஸ்கோல்சின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 2 நாள் நடைபெற்ற இந்த மாநாடு நிறைவடைந்ததும் அங்கிருந்து கிளம்பி, இந்தியா வரும் வழியில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான் வரவேற்றார்.
தொடர்ந்து இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யானின் மறைவுக்கு அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை நேரில் இரங்கல் தெரிவித்தர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலிபா கடந்த மே 13 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும், இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரித்தது.