திருவனந்தபுரம்: மலையாள நடிகையும், இணை இயக்குனருமான அம்பிகா ராவ் கொரோனாவுக்கு பலியானார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அம்பிகா ராவ் (58), மலையாளத்தில் ‘கிருஷ்ண கோபால கிருஷ்ணா’ என்ற படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானார். பிறகு ‘தொம்மனும் மக்களும்’, ‘சால்ட் அன்ட் பெப்பர்’, ‘ராஜமாணிக்கம்’, ‘வெள்ளி நட்சத்திரம்’ உள்பட பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் ‘மீசை மாதவன்’, ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’, ‘தமாஷா’, ‘வைரஸ்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’ உள்பட பல மலையாள படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்னை காரணமாக திருச்சூர் மருத்துவமனை ஒன்றில் அம்பிகா ராவ் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்காகவும் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த அம்பிகா ராவுக்கு ராகுல், சோஹன் என 2 மகன்கள் உள்ளனர்.