டோக்கியோ: ஜப்பானில் கொளுத்தும் கோடை காரணமாக அனல் காற்று வீசி வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவு மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விளக்குகளை அணைக்குமாறு ஜப்பான் அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
ஜப்பானில் தற்போது மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கிறது. ஆனால் கோடை தொடக்கத்திலேயே இதுவரை இல்லாத வகையில் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கே வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த நான்கு நாட்களாகவே அங்கு மிகக் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
ஜப்பானில் ஜூன் மாதத்தில் 35 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. தலைநகர் டோக்கியோவில் சில நாட்களாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. டோக்கியோவின் வடமேற்கில் உள்ள இசேசாகி நகரம் 40.2C ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானில் கடந்த 1875ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். இதனால் அங்கு கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
அனல் காற்றில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெப்ப அலை காரணமாகக் குறைந்தது இருவர் ஜப்பானில் உயிரிழந்து உள்ளனர். பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜப்பானில் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கான மின் தேவை வழக்கத்தை விட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ஜப்பானில் ஏற்கெனவே மின்சார பற்றாக்குறையும் நிலவி வருகிறது.
அண்மையில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வு காரணமாக அணுமின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்தி தடைபட்டுள்ளது. ஜப்பான் தனது மின் தேவைக்கு பெரிய அளவில் அணுமின் நிலையங்களையே நம்பியுள்ளது. இதுமட்டுமின்றி ஜப்பான் மின்சார உற்பத்தியில் அடுத்த இடத்தில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியும் கிடைக்கவில்லை.
ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த தடையில் ஜப்பானும் பங்கு கொண்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய முடியாத நிலையில் ஜப்பான் உள்ளது. மற்ற நாடுகளிலும் நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் ஜப்பான் அனல் மின்நிலையங்கள் மூடப்படும் நிலையே உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் கடுமையான கோடையால் அங்கு தற்போது மின்சார தேவை அதிகரித்திருப்பதால் அங்கு மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மின்சிக்கனத்தை கடைபிடிக்குமாறு மக்களிடம் ஜப்பான் அரசு, கேட்டுக் கொண்டுள்ளது. டோக்கியோ மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் 3 கோடியே 7 லட்சம் மக்களை வீடுகளில் விளக்குகளை அணைக்குமாறு கேட்டுக்கொண்டது.
இதுகுறித்து ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறுகையில் ‘‘உள்ளூர் நேரப்படி மாலை 3 மணி முதல் காலை 7 வரை அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தில் 3 மணிநேரம் மக்கள் மின் விளக்குகளை அணைக்க வேண்டும். ஆனால் அனல் காற்றை தவிர்க்க தேவைப்படும் நேரங்களில் மட்டும் குளிர்சாதன வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என தெரிவித்து இருந்தது.
ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் மின்சார விளக்குகளை அணைத்து விட்ட இருளில் பணியாற்றுகினறனர். வீடுகளிலும் விளக்குகளை அணைத்து ஜப்பான் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
மின் தேவை அதிகரித்தால் நாடு முழுவதும் இருளில் மூழ்கும் அபாயமும் உள்ளதால் முன்கூட்டியே தேவையை குறைக்கும் நடவடிக்கையை ஜப்பான் அரசு எடுத்துள்ளது.