கோவை மாநகர காவல் உளவுத்துறை உதவி ஆணையர் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம்

கோவை: கோவை மாநகர காவல்துறையின் உளவுத்துறை உதவி ஆணையர் பணியாற்றி வந்த முருகவேல், கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர காவல்துறை நிர்வாகம், மாநகர காவல் ஆணையர் தலைமையில் இயங்குகிறது. மாநகர காவல்துறையில் முக்கியப் பிரிவுகளில் ஒன்றாக நுண்ணறிவுப் பிரிவு (உளவுத்துறை) உள்ளது. உதவி ஆணையர் தலைமையில் இப்பிரிவு செயல்படுகிறது. உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 35-க்கும் மேற்பட்டோர் இப்பிரிவில் பணியாற்றி வருகின்றனர். காவல்நிலையம் வாரியாக உளவுக்காவலர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது பகுதிகளில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சட்டம் ஒழுங்கு சார்ந்த நிகழ்வுகள், குற்றச் சம்பவங்கள் சார்ந்த நிகழ்வுகளை உடனடியாக சேகரித்து உதவி ஆணையர் மூலம் மாநகர காவல் ஆணையரின் கவனத்து கொண்டு செல்கின்றனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையர் பணியிடம் மாற்றப்பட்டார். அனுபவம் மிகுந்த நபரான, முருகவேல் கோவை மாநகர காவல்துறையின் உளவுத்துறை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் உளவுத்துறை காவலர்கள் இயங்கி வந்தனர். இந்த நிலையில், டிஎஸ்பி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகளுக்கு நேற்று (ஜூன் 27-ம் தேதி) கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

அதில், கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையர் முருகவேல் கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக, கோவை மாநகர காவல்துறையின் உளவுத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால் அதே துறையில், கூடுதல் துணை ஆணையர் அந்தஸ்தில் சில காலம் நியமிக்கப்பட்டனர். நந்தகுமார், ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் உதவி ஆணையராக இருந்து கூடுதல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றும் இங்கு பணியாற்றியுள்ளனர்.

அதன்படி, தற்போதைய உதவி ஆணையர் முருகவேல், இங்கு பொறுப்பேற்று ஒரு வருட காலமே ஆவதால், கூடுதல் எஸ்.பி.யாக பதவி உயர்வு கிடைத்தாலும் இதே துறையில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாநகர காவல்துறையின் வேறு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து உளவுத்துறைக்கு புதிய உதவி ஆணையர் நியமிக்கப்பட உள்ளார்.

மேலும் சிலருக்கு பதவி உயர்வு

அதேபோல், பேரூர் டிஎஸ்பி.,யாக பணியாற்றி வந்த திருமால், மேட்டுப்பாளையம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பாலமுருகன், கோவை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பாலகுமார் ஆகியோருக்கும் கூடுதல் எஸ்.பி.,யாக பதவி உயுர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.