க்ளியர் ஆனது ரூட்.. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் துணையுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி!

மகாராஷ்டிராவின் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் துணையுடன் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி முனைப்புக்கட்டி வருகிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென போர்க்கொடி தூக்கினார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே. முதலில் பத்திற்கும் மேற்பட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடன் குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கியிருந்த அவர், தனக்கான பலம் அதிகரிக்க அதிகரிக்க அசாம் மாநிலம் கவுகாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு இடம்பெயர்ந்தார். 9 அமைச்சர்கள் உட்பட 36 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே விற்கு ஆதரவு வழங்கினர்.

image
வெறும் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்திற்கும் குறைவான அமைச்சர்கள் கொண்டு ஆட்சி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிவசேனாவின் தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தடுமாறி வருகிறார். தங்களது கூட்டணி தொடரும் என காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தெரிவித்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீட்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். அமைச்சர்களுக்கான பதவி பறிப்பு உள்ளிட்டவை செய்தும் அது பலனளிக்கவில்லை

இதற்கிடையில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய அவர் எடுத்த முயற்சி உச்சநீதிமன்றத்தால் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள நிலையில் புதுவேகம் கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து யோசனை செய்து வருகிறார். இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது.

image
இன்று பிற்பகல் அவசரமாக டெல்லி விரைந்த அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் இணைவது அவர்களுக்கான மந்திரி பொறுப்புகள், ஏக்நாத் ஷிண்டேவிற்கான முக்கியப் பதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் மீண்டும் சொல்வது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்தது தவறு என்பதுதான். எனவே அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

-நிரஞ்சன் குமார்

இதையும் படிக்கலாம்: ‘ஸ்டார் ஹோட்டல்தான்.. ஆனா பில் கட்டல’- மும்பை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பின்னால் யார்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.