புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் பிஹார் மாநிலத்தில் போஜ்புரி மொழி பேசுவோர் அதிகம் உள்ளனர். இதனால், கடந்த 20 ஆண்டுகளாக உ.பி., பிஹாரில் போஜ்புரி மொழி திரைப்படங்கள் வெளியாகி பிரபலமாகி வருகின்றன.
போஜ்புரி கதாநாயகர்களுக்கும் மக்களிடம் செல்வாக்கு கூடி வருகிறது. அதனால், அவர்களை தேர்தல்களில் நிற்க வைத்து பாஜக பலனடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நடந்து முடிந்த உ.பி.யின் கிழக்கு பகுதியிலுள்ள ஆஸம்கர் தொகுதியின் மக்களவை இடைத்தேர்தலில் போஜ்புரி நடிகர் நிரவ்வா எனும் தினேஷ்லால் யாதவ் வென்றுள்ளார். இவர் பாஜக சார்பில் மக்களவையில் நுழையும் 3-வது எம்.பி.யாவார். இவருக்கு முன் டெல்லி வடகிழக்கு தொகுதியில் போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரியும், உ.பி.யின் கோரக்பூரில் போஜ்புரி நடிகர் ரவி கிஷணும் எம்.பி.யாகி உள்ளனர்.
நடிகர் நிரவ்வா, உ.பி.யின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதியின் தலைவருமான அகிலேஷ் சிங் யாதவ் ராஜினாமா செய்த ஆஸம்கர் தொகுதியில் வென்றுள்ளார். இது, ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமான முஸ்லிம்களும், கணிசமான எண்ணிக்கையில் யாதவர்களும் உள்ள தொகுதி. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் எம்எல்ஏ.வானதால் ஆஸம்கர் தொகுதியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனால் நடந்த இடைத்தேர்தலில் அகிலேஷின் ஒன்றுவிட்ட சகோதரர் தர்மேந்தர் யாதவ் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டிருந்தார். இவரை நிரவ்வா, 8,679 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் அகிலேஷ் சிங்கை எதிர்த்த நிரவ்வா, 2 லட்சத்து அறுபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார். எனினும், ஆஸம்கரிலேயே தங்கி பாஜக சார்பில் தொண்டு செய்து வந்தார் நிரவ்வா.
இதேவகையில் தான் ராகுல் காந்தியை 2019-ல் வென்ற ஸ்மிருதி இராணியும், 2014-ல் தோல்விக்கு பின் அமேதியிலேயே தங்கி தொண்டாற்றி வந்தார்.
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த நிரவ்வா, போஜ்புரி மொழி திரைப்படங்களின் ‘சூப்பர் ஸ்டார்’ என வளரத் தொடங்கினார்.
கடந்த 2017-ல் வெளியான நிரவ்வாவின் ஒரு திரைப்படத்தில் அவரை அமர்பாலி எனும் நடிகை முத்தமிடும் காட்சி மிகவும் பிரபலமானது. இதையடுத்து நிரவ்வாவின் பல படங்களில் முத்தமிடும் காட்சிகள் இடம்பெற்றன. தனது சொந்தக் குரலிலும் போஜ்புரி பாடல்கள் பாடியுள்ளார். தன் போஜ்புரி பாடல்களை பிரச்சாரங்களிலும் பாடி தேர்தலில் வென்றுள்ளார்.
இங்கு அகிலேஷுக்கு முன்பாக அவரது தந்தையும் சமாஜ்வாதி நிறுவனருமான முலாயம் சிங் எம்.பி.யாக இருந்தார். சமாஜ்வாதியின் கோட்டையாக கருதப்பட்ட ஆஸம்கர், நிரவ்வாவினால் பாஜக பக்கம் மாறியுள்ளது. இதுபோல், போஜ்புரி நடிகர்கள் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.