“சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நடமாடும் பிணங்கள்” – சஞ்சய் ராவத் சர்ச்சை கருத்து

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக பிரிந்துள்ளனர். அவர்கள் அஸ்ஸாமில் தங்கி இருக்கின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அடுத்த கட்ட விசாரணை வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இந்த வாரத்தில் நடக்க இருக்கிறது. உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கொஷாரியாவிடம் மனு கொடுப்பதற்காக சிவசேனா அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மும்பை ஓரிரு நாளில் மும்பை வர இருக்கிறார்.

இது தவிர பாஜக தரப்பிலும் ஆளுநரை சந்தித்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இது இரண்டும் இல்லாத பட்சத்தில் ஆளுநரே அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கொடுத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும்படி உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிடலாம்.

ஷிண்டே மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் போது தேவைப்பட்டால் தற்காலிக சபாநாயகரை ஆளுநர் நியமிப்பார் என்று பாஜக தெரிவித்துள்ளது. இந்த அரசியல் திருப்பங்களால் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் பாஜக தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என்று பெயர் சொல்ல விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்த முறை முழுமையாக திட்டமிட்டு ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம். இதற்காக கட்சி தலைமையின் உத்தரவுக்காக மாநில பாஜக தலைவர்கள் காத்திருக்கின்றனர். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் அவசரப்பட்டு அஜித் பவாருடன் இணைந்து அதிகாலையில் ஆட்சி அமைத்தார். ஆனால் அந்த அரசு வெறும் இரண்டு நாள்கள் மட்டுமே நீடித்தது.

இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே அணி தனித்து செயல்படுவதா அல்லது ஏதாவது கட்சியுடன் இணையாலாமா என்பது குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டே அணி எந்த கட்சியுடனும் இணையவேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், சிவசேனா இரண்டாக உடைந்தாலும் அதிருப்தி கோஷ்டிக்குத்தான் பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் தான் உண்மையான சிவசேனா என்று பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். அதேசமயம் நவநிர்மாண் சேனாவுடன் இணைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் ஆட்சி கவிழும். உடனே புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்ட பிறகு புதிய சபாநாயகரும் தேர்வு செய்யப்படுவார். புதிய சபாநாயகர் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உண்மையான சிவசேனா என்று அங்கீகரிக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சஞ்சய் ராவத்

இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் படிப்பறிவற்ற நடமாடும் பிணங்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இந்த கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே அஸ்ஸாமில் தங்கி இருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிணங்கள் என்றும் அவை நேரடியாக பிரேத பரிசோதனைக்கு சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். சஞ்சய் ராவத்தின் இக்கருத்து குறித்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், “சிவசேனாவை சஞ்சய் ராவத் அழித்துவிடுவார்” என்று தெரிவித்தனர். இதனிடையே, “அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 முதல் 20 பேர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை மும்பைக்கு அழைத்து வரவேண்டும்” என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். “அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை பல கோடிக்கு விற்பனை செய்துவிட்டனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.