சென்னையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது தொடர்பாக அலுவலர்களுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை…

சென்னை: சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி காரணமாக விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப் படுத்துவது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு  சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

சமீபத்தில் சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னையில் மரங்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும்  மாநகராட்சி ஆணையத் ககன்தீப் சிங் பேடி முக்கிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில்,  ‘மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தற்போது காய்ந்த நிலையிலும், தாழ்வாக கீழே விழும் நிலையிலும் மரங்கள் உள்ளன. இது போன்ற பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடி மரங்கள், மரக்கிளைகள் அவ்வப்போது கீழே சரிந்து விழுவதுடன் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் பத்திரிகை நாளிதழ்களில் இருந்து புகார்கள் பெறப்படுகின்றன. இந்தப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நகர்ப்புறத்தில் உள்ள மரங்களின் வேர்களுக்கு நகரமயமாக்கத்தினால் நிலங்களில் ஊடுறுவ இடமில்லை என்பதால் சாலையில் பரவி வளர் கின்றன. மழைநீர் கால்வாய் கட்டுமானம் நடக்கும்போது மரங்களை வெட்டுவதில் சிக்கல் அல்லது அவற்றின் வேர்கள் கட்டுமான அமைப்பைத் தடுக்கின்றன.

பல இடங்களில் மழைநீர் கட்டுமானத்தால் பல மரங்கள் விழும் நிலையில் உள்ளன. இதுபோன்ற இடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மரங்களின் எடை மற்றும் விழும் பாதிப்பை குறைக்க மரக்கிளைகளை கத்தரிக்க வேண்டும்.

மிகவும் பலவீனமான மரங்களின் தண்டுகளை அருகில் உள்ள சுற்றுச்சுவரில் கட்டி வைக்கலாம். இவை, விழுவதை தடுக்கவும், வீழ்ச்சிக்கு முன் எச்சரிக்கை செய்யவும் உதவும். எனவே, எந்தெந்த தெருக்கள், சாலைகள் பூங்காக்களில், தாழ்வாக மற்றும் காய்ந்த நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் வெட்டி அகற்ற உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை துவங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இயந்திரங்கள் ஏதேனும் பழுதடைந்திருப்பின் உடனடியாக பழுது நீக்க வேண்டும்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.