சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தல் பூஜ்ஜிய நேரம் வழங்காததற்கு, மேயர் பிரியா உடன் திமுக கணக்குக் குழுத் தலைவர் தனசேகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகைளில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய கூட்டத்தில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதிலளித்தார். உறுப்பினர் கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய, கணக்குக் குழு தலைவர் தனசேகர், “இந்த மன்றத்தில் கேள்வி நேரத்தில் சீனியர் உறுப்பினர்களான எங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. பூஜ்ஜிய நேரமும் இல்லை” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “கடந்த மாமன்ற கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் தவிர்த்து, பேசாத உறுப்பினர்களுக்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது இல்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் பேசிய ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், “கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாகவே மேயர், துணை மேயர், ஆணையர், மண்டல தலைவர்கள் ஆகியோரோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு பூஜ்ஜிய நேரமானது தவிர்க்கப்பட்டது” என்றார்.
இதனை அடுத்து பேசிய மேயர் பிரியா, “ஆளும் கட்சி தலைவர் குறிப்பிட்டது போலவே கரோனா பரவல் அதிகரித்ததாலேயே பூஜ்ஜிய நேரம் தவிர்க்கப்பட்டது. வரும் காலங்களில் தொற்று குறையும் பட்சத்தில் பூஜ்ஜிய நேரம் மீண்டும் சேர்க்கப்படும்” என்றார்.