சென்னை: கரோனாவை காரணம் காட்டி விரைந்து முடிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள் முகக்கவசம் அணியாமல் அமர்ந்திருந்தனர்.
சென்னை மாநகராட்சியின், மாதந்திர மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் இன்று காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில், மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில், 17 பேருக்கு கேள்வி கேட்க அனுமதி அளிக்கப்பட்டது. கேள்வி நேரம் முடிந்து, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுகவைச் சேர்ந்த கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர், ‘‘இந்த கூட்டத்தில், சீனியர் உறுப்பினர்களான எங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. நேரமில்லா நேரம் ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நேரமில்லா நேரத்தில் தான் உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை பற்றி சொல்ல முடியும். எனவே, மன்ற கூட்டத்தை நாள் முழுதும் நடத்த வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, ‘‘கரோனா பரவல் அதிகரித்ததாலேயே நேரமில்லா நேரம் தவிர்க்கப்பட்டது. வருங்காலங்களில் கரோனா தொற்று குறையும் பட்சத்தில், நேரமில்லா நேரம் மீண்டும் சேர்க்கப்படும்,’’ என்றார். இதன் காரணமாக மிகவும் குறைந்த நேரத்திலியே மாமன்ற கூட்டம் நிறைவு பெற்றது. ஆதாவது காலை 10 மணிக்கு தொடங்கி கூட்டம் 12 மணி வரை மட்டும் நடைபெற்றது.
ஆனால், கரோனா காரணமாக, ஒன்றரை மணி நேரத்தில் முடிக்கப்பட்ட கூட்டத்தில், கவுன்சிலர்கள் அனைவரும் ‘ஏசி’ அறையில் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். மேயர் பிரியா, பொறுப்பு கமிஷனர் பிரசாந்த் ஆகியோருடன், ஒரு சில கவுன்சிலர்களை தவிர்த்து, பெரும்பாலான கவுன்சிலர்கள் முகக்கவசம் அணியாமல்தான் இருந்தனர்.