காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் தனி உதவியாளர் (பிஏ) பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது “கிரிமினல் மிரட்டல்” குற்றச்சாட்டும் பதிவு செய்துள்ளனர் டெல்லி காவல்துறையினர்.
டெல்லி போலீசில் பெண் ஒருவர் அளித்த புகாரில், 71 வயதான பிபி மாதவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், திருமணத்தை காரணம் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டினார். அவரது புகாரில் பிபி மாதவன் அந்தப் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், அவளை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனது அனுமதியின்றி அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் போர்டுகளை வைப்பது மற்றும் பிற வேலைகளைச் செய்து வந்த அந்தப் பெண்ணின் கணவர் 2020 ஆம் ஆண்டு இறந்தார். “பிப்ரவரி 2020 இல் என் கணவர் இறந்த பிறகு, நான் வேலை தேட ஆரம்பித்தேன். மாதவனுடன் தொடர்பு கொண்டேன். அவர் முதலில் என்னை நேர்காணலுக்கு அழைத்தார். அவர் என்னுடன் வீடியோ கால் செய்து வாட்ஸ்அப்பில் அரட்டை அடித்தார்.
அவர் என்னை உத்தம் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று, தனது காருக்குள் என்னை வலுக்கட்டாயமாகத் தாக்கினார். பிப்ரவரி 2022-இல், அவர் என்னை சுந்தர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று என் அனுமதியின்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் ” என்று அந்த பெண் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிபி மாதவன் “எஃப்.ஐ.ஆர் என்னை இழிவுபடுத்தவும் எனது நீண்ட மற்றும் நேர்மையான வாழ்க்கையின் மீது அவதூறுகளை ஏற்படுத்தவும் மட்டுமே இந்த வழக்கு நோக்கமாக உள்ளது. எனக்கு எதிராகக் கூறப்படும் எஃப்.ஐ.ஆரை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுவதற்கும், எனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட தவறான மற்றும் தீங்கிழைக்கும் புகாருக்கு எதிராக கிடைக்கக்கூடிய சட்டப்பூர்வ தீர்வுகளைப் பெறுவதற்கும் எனது உரிமைகளை நான் வைத்திருக்கிறேன்” என்று கூறினார். சோனியா காந்தியின் தனி உதவியாளர் மீதே பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM