இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை, பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பி உள்ள இலங்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் வருவாய் இல்லை.
இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
நீண்ட நாட்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில், பிரதமர் பதவியை, அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக, ரணில் விக்ரமசிங்கே நியமனம் செய்யப்பட்டார்.
பெட்ரோல் 470 ரூபாய்; டீசல் 460 ரூபாய் – நாட்டு மக்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் இலங்கையில் வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை நகர்ப்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும் ஏனைய அனைத்து சேவைகளும் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.