சென்னை: வரும் ஜூலை 11-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்கத் தடை கோரியும் அதிமுக பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி அதிமுக பொதுக்குழு உறுப்பினரான திருப்பூர் எம்.சண்முகம் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளக் கூடாது என்றும் தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்றும், அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் “இந்த பொதுக்குழு சட்டப்படி நடைபெறவில்லை” என்று கூறிவிட்டு, பாதியிலேயே வெளியேறினர்.
பின்னர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில், மீண்டும் ஜூலை 11-ல் பொதுக்குழு நடைபெறும் என்றும், அதில் ஒற்றைத் தலைமை குறித்து ஏகமனதாக முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜூலை 11-ல் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழுவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த எம்.சண்முகம் சார்பில், ஜூலை 11-ல் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப் பட்டுள்ளது.
அதில், ‘‘அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே, அது சாத்தியம். இந்நிலையில், ஜூன் 23-ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற உத்தரவு அப்பட்டமாக அவமதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் ஆகியோரை, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.
அதேபோல, அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்படுவதாவும் அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவமதிப்பாக இருக்கும் நிலையில், அவரது தலைமையில் வரும் ஜூலை 11-ல் மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தது சட்டவிரோதமானது.
எனவே, ஜூலை 11-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல, அதிமுக நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்கத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.