தலையில் தேங்காய் விழுந்ததால் நடுரோட்டில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண்! அதிர்ச்சி வீடியோ

கோலாலம்பூர்,

மலேசியாவில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் அவர் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவி வருகிறது.

புவான் அனிதா என்பவர் சாலையில் தன் மகளுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். ஸ்கூட்டரை அவரது மகள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று கீழே விழுந்தது. அது அனிதாவின் தலையில் காயத்தை ஏற்படுத்தியது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர், மயங்கி கீழே விழுந்தார். ஸ்கூட்டரை ஓட்டி வந்த மகள் உடனே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அவரிடம் விரைந்தார். அக்கம்பக்கத்தினர் மற்றும் பிற வாகன ஓட்டிகள் அவர்களுக்கு உதவ ஓடி வந்தனர். அனைவரும் சேர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மலேசியாவில் உள்ள பினாங்கு தீவு ஜாலான் தெலுக் கும்பார் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தின் காட்சிகளை அந்த பெண்ணின் மகள் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். சம்பவத்தின் போது அவரது தங்கை வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சுயநினைவு திரும்பியுள்ளார். அவரது தலையில் தேங்காய் விழுந்ததில் இடது கை மற்றும் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இரண்டு விலா எலும்புகள் உடைந்தன. புவான் அனிதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் அரசியல்வாதியான அஸ்ருல் மகாதீர் அஜீஸ், பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். இது குறித்து அஜீஸ் கூறுகையில், புவான் அனிதா எனது தொகுதியைச் சேர்ந்தவர். சாலையில் விழுந்த தேங்காய், தனியாருக்கு சொந்தமான மரங்களில் இருப்பவை. இந்த மரங்கள் அப்பகுதியில் தொல்லையாக இருப்பதாகவும், விரைவில் அந்த மரங்கள் அதிகாரிகளால் வெட்டப்படும் என்று கூறினார். எனினும், அதிர்ஷ்டவசமாக அந்த பெண் காயங்களுடன் உயிர்பிழைத்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.