புதுடில்லி :’மருத்துவப் படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட மாட்டாது. திட்டமிட்டபடி, ஜூலை, 17ல் நடக்கும்’ என, கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான, நீட் நுழைவுத் தேர்வு, ஜூலை, 17ல் நடத்தப்படும் என, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால், நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது பற்றி, மத்திய கல்வி அமைச்சக உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:கடந்த இரண்டு ஆண்டாக, கொரோனா பரவல் காரணமாக, கல்வியாண்டில் மாற்றம் செய்ய நேரிட்டது. இதனால், மாணவர்கள் கற்கும் திறன் பாதிக்கப்பட்டது.
நுழைவுத் தேர்வை ஒத்தி வைத்தால், கல்வியாண்டில் பாதிப்பு ஏற்படும். அதனால், ஏற்கனவே திட்டமிட்டபடி, ஜூலை, 17ல் நீட் நுழைவுத் தேர்வு நடக்கும்.இதற்கான ‘அட்மிட் கார்டு’ எனப்படும் தேர்வு அனுமதி சீட்டுகள், ஜூலை முதல் வாரத்தில் இணைய தளத்தில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக, தேர்வு மையங்கள் குறித்தஅறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement