திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். மலையாள புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. ஜூன் 27 முதல் ஜூலை 3ம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், போலீசார் கைது செய்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதன்படி நேற்று விஜய் பாபு விசாரணைக்காக எர்ணாகுளம் தெற்கு போலீசில் ஆஜரானார். 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். விஜய் பாபு குற்றம் செய்தது நிரூபணமாகி உள்ளதால் அவரை கைது செய்ததாக கொச்சி துணை போலீஸ் கமிஷனர் குரியாகக்கோஸ் தெரிவித்தார். பின்னர் போலீசார் அவரை பலாத்காரம் நடந்ததாக நடிகை கூறிய அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூலை 3ம் தேதி வரை விஜய் பாபு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். விஜய் பாபுவின் அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமல்லாமல் கொச்சியிலுள்ள சில ஓட்டல்களில் வைத்தும் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை புகாரில் கூறி இருந்தார். இதையடுத்து விசாரணை நடைபெறும் நாட்களில் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் ஓட்டல்களுக்கும் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவும் போலீசார் தீர்மானித்துள்ளனர். இன்று அல்லது நாளை இதற்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் கொச்சியில் நடந்த மலையாள நடிகர்கள் சங்க கூட்டத்தில் விஜய் பாபு கலந்து கொண்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலாத்கார புகாரில் சிக்கியுள்ள விஜய் பாபுவை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது தவறு என்று பிரபல நடிகர்கள் ஹரிஷ் பேரடி, கணேஷ் குமார் மற்றும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.