அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரிய பரபர்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த 23-ந் தேதி வானகரத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதி என்பது போல் தகவல் வெளியானது. இதனால் கட்சியில் இருந்து ஒபிஎஸ் ஓரம்கட்டப்படுவது ஏறக்குறைய உறுதியாகவிட்டதாக கூறப்பட்டது
இந்நிலையில். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் என்பவர் பொதுக்குழு நடைபெற்றாலும் 23 தீர்மானங்களுக்கு மேல் நிறைவேற்றக்கூடாது என்று கூறியிருந்தார்.
அதன்படி போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 11-ந் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் இபிஎஸ் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தடை தொடர்பாக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்டறிய வேண்டும் என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதில், அதில், ”பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. இதில் நீதிமன்றம் தலையிட எதுவும் இல்லை. பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“