முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கட்சியில் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்த நுபர் சர்மா என்பவர் சமீபத்தில் இஸ்லாமியர் புனிதரான முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியது பலரின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியது. இவருக்கு நாடு முழுவழும் பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில். உதய்பூரை சேர்ந்த டெய்லர் ஒருவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜ்சமந்த் மாவட்டத்தில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனால் அந்நகரில் பெரும் பதற்றம் நிலவி வருவதால், இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு பணிகளுக்காக சட்டம் ஒழுங்கு, ஏடிஜி ஹவா சிங் குமாரியா, மூத்த அதிகாரிகளுடன் 600 காவல்துறையினரும் உதய்பூருக்கு அனுப்பப்படுவதாகவும், ராஜஸ்தான் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பாக காவல்துறை அளித்த தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் துணி தைப்பதற்கு அளவு எடுப்பதற்காக டெய்லரை சந்தித்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரிடம் டெய்லர் அளவெடுக்க மற்ற நபர் அதை வீடியோ எடுத்துள்ளார். ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபர் டெய்லரை வெளியே இழுத்து அவரது கழுத்தில் தாக்குகிறார், இதனால் டெய்லர் வலியால் அலறி துடித்துள்ளார்.
தொடர்ந்து மற்றொரு வீடியோவில், இருவரும் தங்களை முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் என அடையாளப்படுத்திக்கொண்டு, “தலை துண்டிக்கப்பட்டதை” பற்றி பெருமையாக பேசுகின்றனர். பின்னர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு “எச்சரிக்கை” விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், “உதய்பூரில் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளார் மேலும் செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், “மோசமான சூழல்” குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
Talking to media at Jodhpur airport https://t.co/JCW5AW3XTa
— Ashok Gehlot (@ashokgehlot51) June 28, 2022
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதால், கெலாட், “இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என்று அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீடியோவைப் பகிர்வதன் மூலம், சமூகத்தில் வெறுப்பைப் பரப்பும் குற்றவாளியின் நோக்கம் வெற்றியடையும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“