பார்லி.,க்கு அதிகாரம் தரும் மசோதா இலங்கை அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

கொழும்பு:இலங்கை பார்லி.,க்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2015ல், இலங்கையின் அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, பார்லி.,யின் அதிகார வரம்பிற்குள் அதிபரை கொண்டு வரும் வகையில், அரசியல் சாசனத்தில் சட்டத் திருத்தத்தை செய்தார். இந்த சட்டத்தை, 2020ல் அதிபர் கோத்தபய ராஜபச்சே ரத்து செய்து, அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்தினார்.
இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடிக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் காரணம் எனக் கூறி, மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அதிபரின் அதிகாரத்தை குறைத்து, அவரை பார்லி.,யின் கீழ் செயல்பட வைக்கும் அரசியல் சாசனத்தின், 21வது சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சியான சமாகி ஜனா பாலவேகயா தாக்கல் செய்தது.
இந்த மசோதா சட்ட வடிவம் பெறுவதற்கு முன், பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அரசியல் சாசனத்தின் 22வது சட்டத் திருத்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. அதிபரை பார்லி.,யின் கீழ் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை வழங்கும் இந்த வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, செய்தி தொடர்பாளர் பண்டுலா குணவர்த்தனா தெரிவித்து உள்ளார். இந்த மசோதா விரைவில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.

விரைவில் படகு போக்குவரத்து

புதுச்சேரியில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு, விரைவில் படகு போக்குவரத்து துவங்க உள்ளது. ”இந்தியா – இலங்கை கூட்டு திட்டத்தில், தனியார் மேற்கொள்ளும் இந்த படகு போக்குவரத்து வாயிலாக, அத்தியாவசியப் பொருட்களை விரைவாக பெறலாம்,” என, இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.