ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதன்போது ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் எரிபொருளைப் பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முடங்கியது போக்குவரத்து
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பொது போக்குவரத்து இன்றைய தினம் முடங்கியிருந்தது. மேலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.