பெஷாவர்:பாக்.கில் ‘போலியோ’ சொட்டு மருந்து தரும் குழு மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீசார் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
உலகிலேயே பாக். மற்றும் ஆப்கனில் தான் போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படாமல் உள்ளது. இதனால் பாக். அரசு வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆனால் சமீபகாலமாக பாக்.கின் வட மேற்கில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் போலியோ தடுப்பு குழு மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.இதனால் போலியோ சொட்டு மருந்து குழு போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாகச் செல்கிறது.
இந்நிலையில் வசிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சென்ற போலியோ சொட்டு மருந்து குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு போலீசார் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.இந்தக் கொலை தொடர்பாக எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாக்.கில் காணப்படும் போலியோ வைரஸ் பிரிட்டன் தலைநகர் லண்டனில் கழிவு நீரில் தென்பட்டுள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Advertisement