சென்னை, மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 27 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2016-ம் ஆண்டு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், மயிலாப்பூரைச் சேர்ந்த முத்து (42) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு முத்துவை கைதுசெய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்த போலீஸார், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணை முடிவடைந்தநிலையில் 27.6.2022-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. முத்துமீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கிக்கொடுத்த மயிலாப்பூர் போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.