ஆவடி அருகே தனியார் கல்லூரி மாணவன் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரிப்பால நரேஷ். இவர் ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த அவர், தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்குச் செல்ல இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் மின்சார புறநகர் ரயிலில் ஏறி பயணம் செய்துள்ளார்.
அப்போது ஆவடி ரயில் நிலையத்திற்கும் அண்ணனூர் ரயில் நிலையத்திற்கும் இடையே கால் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து மின்சார ரயிலை நிறுத்தினர். பின்னர் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவன் ரிப்பால நரேஷை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார ரயிலிலிருந்து கால் தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சக மாணவர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM