சென்னை: அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதுதான் திராவிட மாடலா? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அடுத்தக் கட்ட போராட்டத்தை மேற்கொள்ள இருக்கும் சூழலில், அவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசு முன் வர வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்து, ‘ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின் முதல்வராகி ஓராண்டு ஆன பின்னும் அதனை நிறைவேற்றாமல் இருப்பது நம்பிக்கை துரோகமாகும்.
கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஏழை, எளிய மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மனசாட்சியோடு நிறைவேற்றாமல் இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா?” இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.