சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை என்று, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் இடம், அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை ஏதும் தமிழக அரசு தரப்பில் விதிக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
“அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடை செய்வது என்பது இல்லை. ஆனாலும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகின்ற முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மாதிரியான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் எந்தவித தடையும் கிடையாது. இருந்தாலும்கூட எங்கே யார் கூடினாலும், எந்த இயக்கம் பொதுக்கூட்டங்களை, தெருமுனை கூட்டங்களை ஏற்பாடு செய்தாலும் அதற்க்கு அனுமதி வழங்கி கொண்டிருக்கிறோம். யார் கூடினாலும் அங்கு சமூக இடைவெளியையும், முக கவசம் அணிவதையும் முன்னுரிமை தந்தால் போதுமானது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈ.சி.ஆர். விஜிபியில் அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும், ஏற்கனவே மீனம்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகங்களில் பொதுக்குழு நடத்த பரிசீலிக்கப்பட்ட பிறகு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்கிறதோ என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.