80 கிலோ எடை இருந்த நான், கடந்த ஒரு வருடத்தில் 15 கிலோ குறைத்திருக்கிறேன். ஜிம்முக்குச் சென்று வொர்க் அவுட் செய்கிறேன். ஆனால் எடை குறைந்ததன் விளைவாக எனக்கு தோள்பட்டை, நெஞ்சுப் பகுதிகளில் வரி வரியாக தழும்புகள் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட பிரசவ தழும்புகள் போல இருக்கின்றன. இவற்றை சரியாக்கி, பழைய சருமத்தைக் கொண்டு வர முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
ஆரோக்கியத்தின் அவசியம் உணர்ந்து, எடையைக் குறைத்ததற்காக முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்.
நிறைய மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து, உங்கள் சருமத்தை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்வதுதான் முதல் தீர்வு. கர்ப்பத்தின் போது வயிறு மற்றும் இடுப்புப் பகுதியிலுள்ள சருமமானது விரிவடையும். அதனால் அந்தப் பகுதிகளில் தழும்புகள் ஏற்படுகின்றன.
எடைக்குறைப்பின் போதும் அப்படித்தான் நிகழ்கிறது. அதாவது சருமமானது சுருங்குவதால் தழும்புகள் ஏற்படுகின்றன.
எடைக்குறைப்பினால் சருமத்தில் உண்டான தழும்புகளை மறைக்க, மாய்ஸ்ச்சரைசர் மட்டுமே உபயோகித்தால் போதுமா என்றால், போதாது. இந்தப் பிரச்னைக்காக வேறு சில சிகிச்சைகளும் உள்ளன. ஆனால், அவையும் நூறு சதவிகிதம் பலன் தரக்கூடியவை அல்ல.
இப்படி ஏற்படும் தழும்புகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பார்ப்பதற்கு வெள்ளையாகவும், மற்றொன்று பிங்க் நிறத்திலும் இருக்கும். பிங்க் நிற தழும்புகள் இளம் தழும்புகள் என்பதால் அவற்றைச் சரியாக்குவது ஓரளவுக்கு எளிது. அதுவே வெள்ளைத் தழும்புகள் நீண்ட நாள் தழும்புகள் என்பதால் அவற்றைச் சரியாக்குவது ரொம்பவே கடினம்.
மைக்ரோ நீட்லிங் (Micro needling) என்றொரு சிகிச்சை இதற்குப் பலனளிக்கும். இந்தச் சிகிச்சை கொலாஜன் சுரப்பைத் தூண்டி, தழும்புகளைக் குறைக்கும். அதாவது சருமத்தின் எலாஸ்டிக் தன்மைக்குக் காரணமான கொலாஜனை புதிதாக உற்பத்தி செய்ய உதவுவதால், தழும்புகள் ஏற்பட்ட பகுதிகளில் நல்ல மாற்றம் தெரியும்.
இதனுடன் தேவைப்பட்டால் பிஆர்பி (Platelet-rich plasma (PRP) என்ற சிகிச்சையையும், உங்கள் சரும மருத்துவர் பரிந்துரைப்பார். ரத்தத்தில் உள்ள தட்டணுக்களான பிளேட்லெட்ஸை வைத்துச் செய்யப்படுகிற சிகிச்சை இது. அதில் தழும்புகளை மறைக்கும் தன்மை இருக்கும்.
இன்ஜெக்ஷன் வடிவிலோ, மேல்பூச்சாகவோ இது கொடுக்கப்படும்போது இன்னும் நல்ல பலன் தெரியும். எனவே உங்கள் சரும மருத்துவரை நேரில் அணுகி, உங்கள் தழும்புகளின் தன்மைக்கேற்ப ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டறியுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.