Gold, Silver Rates Today News Updates in tamil: ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி முதல் படையெடுப்பு நடத்தி போர் தொடுத்து வருகிறது. இதனால், உக்ரைனுக்கு ஆதரவு கொடுத்து வரும் நேட்டோ உறுப்பு நாடுகள், அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. இந்த பொருளாதார தடையை தனது பாணியில் சமாளித்து வரும் ரஷ்யா, அதன் பணப் பரிமாற்றத்திற்காக ரஷ்ய ரூபிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. ஆனால், இந்த பணப் பரிமாற்றத்திற்கு சில நாடுகள் ஒப்புதல் அளிக்கவில்லை.
ரஷ்ய தங்கம் இறக்குமதிக்கு தடை?
இதற்கிடையில், மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையை சமாளிக்க ரஷ்யா அதன் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளது. உலகளவில் ஆண்டு ஒன்றுக்கு வெட்டியெடுக்கப்படும் தங்கத்தில் ரஷ்யாவின் பங்கு 10% ஆகும். அதாவது ஆண்டுக்கு ரஷ்யா 350 முதல் 380 டன் வரையிலான தங்கத்தை உற்பத்தி செய்து வருகிறது. இவற்றின் தோராயமான ஏற்றமதி மதிப்பு சுமார் 15.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்நிலையில், தற்போது ரஷ்யா ஏற்றுமதி செய்யும் இந்த தங்கத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் சில குரல் விடுத்துள்ளன.இதனிடையே, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஜப்பான், ஐக்கிய பேரரசு (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அமெரிக்கா (அமெரிக்கா) உள்ளிட்ட ஏழு நாடுகள் பங்கேற்கும் ஜி – 7 உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்யா இந்த ஜி – 7 நாடுகளுக்கு தான் அதன் 90% தங்கத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து தான் ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. இப்படியாக, ரஷ்ய தங்கத்தின் மீது தடை விதிக்கப்படும் போது அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்றால், நிச்சயம் ஏற்படுத்தும் என்றும், தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு
உலகில் சீனாவிற்கு பிறகு அதிகப்படியான தங்கத்தை இந்தியா தான் இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் தங்கம் முதலீடாக தவிர, ஒரு உணர்மிக்க பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ரஷ்ய தங்க இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில், உலக வர்த்தக மையங்களான இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் தங்க பற்றாக்குறை நிலவும். இதனால், துருக்கி, சீனா சந்தைகளில் தங்கத்திற்கான தட்டுப்பாடு நிலவும். மேலும், கள்ளச்சந்தையில் தங்கம் அதிகப்படியாக புழங்க தொடங்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சுவிட்சர்லாந்திடம் இருந்து தான் அதிகப்படியான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. முன்னர் கணிக்கப்பட்டது போல, ஜி – 7 உச்சி மாநாடு, அமெரிக்காவின் முதல் காலாண்டு ஜிடிபி தரவு வெளியீடு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கச்ச எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஓபேக் கூட்டம் ஆகியவை நிச்சயம் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் இன்றைய தங்கம் விலை நிலவரம்:-
இந்தியாவில் இன்று 1 கிலோ 22 காரட் தங்கத்தின் விலை ரூ.10,000 ஆகவும், 24 காரட் 1 கிலோ தங்கத்தின் விலை ரூ. 11,000 ஆகவும் உயர்ந்துள்ளது. அதன்படி தலைநகர் டெல்லியில், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.47,650 ஆகவும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.51,980 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது தனிப்பட்ட நகரங்களுக்கு உட்பட்டு சற்று மாறுபடும்.
அந்த வகையில் நிதித் தலைநகரான மும்பையில், 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ.47,650 ஆகவும், 24 காரட் ஒன்றுக்கு 10 கிராம் ரூ.51,980 ஆகவும் உள்ளது.
சென்னையில் தங்கம் விலை நிலவரம்:-
சென்னையில் நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,770 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.38, 160 ஆகவும் விற்பனையாகியது. மேலும், 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.47,700 ஆகவும், 24 காரட் 10 கிராமுக்கு ரூ.52,030 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:-
வெள்ளி நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.66 என விற்பனையாகிய நிலையில், இன்று 40 காசுகள் குறைந்துள்ளது. அதன்பாடு, ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60 காசுக்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.65,600க்கு விற்பனையாகி வருகிறது.