இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எந்த புதிய தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜூன் 22இல் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எந்த புதிய தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டு பொதுக்குழுவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
முக்கியமான தீர்மானமான ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டுவர இயலாத சூழல் ஏற்பட்டதை அடுத்து இருபத்து மூன்று தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று நத்தம் விசுவநாதன் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழு செயற்குழு ஆகியவற்றில் எடுக்கக்கூடிய முடிவுகள் என்பது கட்சி சார்ந்த விவகாரம் என்றும் பெரும்பான்மை எண்ணிக்கை உறுப்பினர்கள் சொல்லக்கூடிய விவகாரங்கள் தான் கட்சி இறுதி முடிவாக எடுக்கும். மேலும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் என்பது சட்டபூர்வமாக நடத்தப்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட்டது என்பது அதிகாரத்தை மீறிய விஷயம் என்றும், எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி மனுவில் குறிப்பிடப்பட்ட விஷயங்களே இதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலமாக தனது கூடுதல் பலத்தினை நீதிமன்றத்தில் வெளிப்படையாக காட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM