சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர், தனது சொந்த ஊரான தஞ்சைக்கு சென்றுவிட்டு கடந்த ஞாயிறன்று, சென்னை திரும்பினார் வைத்திலிங்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அவர் சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வைத்திலிங்கம் சென்னையில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சளி, காய்ச்சல் தொந்தரவுகள் இருப்பதால், கடந்த சில நாட்களாக யாரையும் சந்திக்காமல் இருந்த வைத்திலிங்கம், ஓபிஎஸ் உள்ளிட்டோரை தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் கரோனா: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர், கட்சியின் உட்கட்சிப்பூசல் பூதாகரமாக கிளம்பியுள்ளது. ஒருபக்கம் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஜூலை 11-ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொருபக்கம் ஓபிஎஸ், ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அழைப்பு விடுக்காமல், பொதுக்குழுவைக் கூட்ட முடியாது எனவே பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று எதிரெதிர் துருவங்களாக இருக்கும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபால், மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர், இபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் நேற்று (ஜூன் 28) ஆண்கள் 815 பெண்கள் 669 என மொத்தம் 1,484 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 632 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து, ,71,289 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 24,293 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 736 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு 1,500-ஐ நெருங்குவது குறிப்பிடத்தக்கது.