புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் எதனையும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை. அதனால் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னதாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் பரிசீலனை செய்து நாட்குறிப்பு எண் வழங்கியுள்ளதால், விரைவில் விசாரணை பட்டியலில் இடம்பெறலாம் என தெரிகிறது.