குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வருகிற ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜூலை 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதன் மீதான பரிசீலனை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூலை 22ஆம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசு துணைத்தலைவராக உள்ள வெங்கையா நாயுடு, கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.