மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும்படி ஆளுநர் பகத்சிங் கோஷாரியா கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான பதவி பறிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கு வரும் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே அம்மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தடை விதிக்கும்படி சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று மாலை இம்மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. பாஜக தலைவர்கள் கேட்டுக்கொண்ட அடுத்த நாளே ஆளுநர் கோஷாரியா பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு பிறப்பித்து இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத், “ஆளுநரின் முடிவு ஜெட் விமானத்தை விட வேகமாக இருக்கிறது.
ரபேல் விமானம் கூட இந்த அளவுக்கு வேகமாக இருக்காது. ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சிவசேனா தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்காமல் இருக்கும் போது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிறப்பித்திருக்கும் உத்தரவு சட்டவிரோதமானது. எதையும் நாங்கள் சட்டப்பூர்வமாகவே செய்வோம். சட்டப்பூர்வமாகவே போராடுவோம். எங்களுடன் போராடுவதாக இருந்தால் நேரடியாக போரிடுங்கள். ஆளுநரை பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவா-வுக்கு இடமாறும் எம்.எல்.ஏ.க்கள்!
இதற்கிடையே அஸ்ஸாமில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து கோவாவுக்கு வர இருக்கின்றனர். இன்று மாலைக்குள் கோவாவுக்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்காக பாஜக ஆளும் கோவாவில் ஓட்டல் ஒன்றில் 70 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இன்று இரவு கோவாவில் தங்கிவிட்டு மும்பை வரும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏ. தங்களது பயண திட்டத்தில் மாற்றம் செய்திருக்கின்றனர்.