“இந்த நவீன தமிழ்நாடு, கலைஞரால் உருவாக்கப்பட்டது..!" – முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் திறந்து வைத்தார். தொடர்ந்து, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்துப் பேசிய ஸ்டாலின், “நீண்ட நெடிய வரலாற்றுகளைக் கொண்ட நகரம், திருப்பத்தூர் நகரம். ஜவ்வாது, ஏலகிரி மலைத் தொடர்களால் சூழப்பட்ட இயற்கை எழில் மிகுந்த மாவட்டமாகவும் திருப்பத்தூர் அமைந்திருக்கிறது. இங்கு, பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். ஏலகிரி மலையில் உற்பத்தியாகக்கூடிய காட்டாறு மலை அடிவாரத்தில் கீழிறங்கி ஜலகம்பாறை அருவியாக உருவெடுக்கிறது. பொது மக்கள் பல இடங்களிலிருந்து வந்து கண்டுகளிக்கிறார்கள். இப்படிப்பட்ட இயற்கை சூழ்ந்த மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கின்ற ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்துக்கான அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றி. இந்த மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராகவும் எந்நாளும் பொறுப்பான அமைச்சராக இருக்கக்கூடிய எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருப்பத்தூர் பொறுப்பைக் கொடுத்ததும், இங்குவந்து சொந்த மாவட்டத்தைப்போல பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் அவர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

‘நான் என்ன நினைப்பேன் என்று நான் சொல்லாமலேயே, என் கண் ஜாடையைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதில் எ.வ.வேலு முன்னிலையிலிருக்கிறார்’ என்று தலைவர் கலைஞராலும் அவர் பாராட்டப்பட்டவர். கலைஞர் மனதை நிறைவு செய்வது என்பது சாதாரண காரியம் கிடையாது. அண்ணன் துரைமுருகனுக்கு நன்றாக தெரியும். ஒருசிலர்தான் சிறப்பாகச் செயல்பட்டு தலைவர் கலைஞரின் பாராட்டை பெற்றவர்கள். அதில் வேலுவும் ஒருவர். எதிலும் வல்லவர் வேலு. ‘எ’ எதிலும், ‘வ’ வல்லவர். அதனால்தான் அவரை எ.வ.வேலு என்று குறிப்பிட்டேன். இந்த திருப்பத்தூர் மாவட்டம் திருப்புத்தூர் என்றுச்சொல்லும் அளவுக்கு மாறி வந்துகொண்டிருக்கிறது. அவருக்குத் தோலோடு தோல் கொடுத்து செயலாற்றி கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 25-ம் தேதி இந்த விழா நடந்திருக்க வேண்டும். கடந்த வாரம் எனக்கு லேசான காய்ச்சல் வந்துவிட்டது. அது முழுமையாக குணமாகாத காரணத்தினால், மருத்துவர்கள் ஒருசில நாள்கள் ஓய்வெடுக்க உத்தரவிட்டனர். அதனால், குறிப்பிட்ட தேதிக்கு என்னால் வர முடியவில்லை. இன்றைய நாள் புதிய உற்சாகத்தோடு உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். மருந்து, மாத்திரைகளைவிட மக்கள் முகங்கைளப் பார்க்கும்போது உடல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கிறது. மக்களை சந்திக்கின்றபோது ஏற்படும் உற்சாகத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. வரும் வழியில் சில தாய்மார்களும், சில இளைஞர்களும் என்னை நிறுத்தி கையைப் பிடித்து, ‘உடம்பு எப்பிடியிருக்கு?’ என்று கேட்டார்கள். மெய்சிலிர்த்து கொண்ட நான், ‘நீங்க நல்லாயிருக்கிங்களா? இந்த ஆட்சி எப்படி நடக்குது? ஏதாவது குறை இருக்கிறதா? குற்றம் இருக்கிறதா? என்று கேட்டேன். ‘ஆட்சியில் எந்த குற்றமும் இல்லை. குறையும் இல்லை. முதலில் நீங்கள் ஓய்வெடுங்கள்’ என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களின் சிரிப்பை பார்த்தேன்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா. அவர் சொன்னதைப்போல ஏழையின் சிரிப்பை காணும்போது நாமும் உற்சாகமடைகிறோம் என்பதுதான் உண்மை.

ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

அரசியல் நெறிமுறைகளை மட்டுமல்ல ஆட்சியல் நெறிமுறைகளையும் இந்தியாவுக்கு வழங்கக்கூடிய வழிகாட்டியாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசு அண்ணா தலைமையில்தான் முதன் முதலில் ஆட்சியில் அமர்ந்தது. மூன்று முத்தான திட்டங்களை அவர் கொடுத்தார். காலம் அவரை நம்மிடமிருந்து இரண்டு ஆண்டுகளிலேயே பிரித்துவிட்டது. அதன்பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற நம்முடைய கலைஞர் உருவாக்கிய திட்டங்களால் உருவானதுதான் இந்த நவீன தமிழ்நாடு. இன்றைக்கு நாம் பார்க்கும் இந்த தமிழ்நாடு, கலைஞரால் உருவாக்கப்பட்டது. அப்போது, வெளிமாநிலத்திலிருந்து வந்த பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் ஆய்வு செய்து, ‘திராவிட முன்னேற்றக் கழகம் தனது எல்லையை தமிழ்நாட்டோடு சுருக்கிக்கொண்டாலும், அதனை முன்னெடுக்கக்கூடிய தத்துவங்கள் இந்தியா முழுமைக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கிறது’ என்று எழுதி காட்டினார்கள்.

நான் தமிழ்நாட்டை ஆண்டாலும், முன்னெடுத்து அமல்படுத்தும் திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் அமைந்திருக்கின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம். இந்த இலக்கணத்திலிருந்து இம்மி அளவும் மாறாமல் இந்த ஆட்சி பீறுநடை போடும். அப்படி நடந்தால் 5 ஆண்டுக்காலத்தில் இந்த தமிழ்நாடு பெரிய மாற்றமடையும். என் சக்தியை மீறி உழைத்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.